32 நாள் தொடர் போராட்டம் தொடங்கியது முதல் நாளில் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் நடத்தியதுபோல, சென்னையில் விவசாயிகளின் 32 நாட்கள் தொடர்போராட்டம் தொடங்கியது. நேற்று அவர்கள் அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-09 22:15 GMT


தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசு தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும், மத்தியபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்தும் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் இடுப்பில் துண்டு மற்றும் தலையில் தலைப்பாகை என அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

கைவிலங்கு

டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தியதுபோல சென்னையிலும் ஒவ்வொரு நாளும் நூதன போராட்டங்களில் ஈடுபட விவசாயிகள் முடிவு எடுத்துள்ளனர். அதன்படி இன்று (சனிக்கிழமை) சங்கிலியால் உடலை கட்டி, கைவிலங்கு போட்டபடி போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த கோரிக்கையையும் இதுவரையிலும் நிறைவேற்றவில்லை. அரசு எங்களை அரை நிர்வாணமாக்கிவிட்டது.

32 நாள் போராட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 10-ந்தேதி வரையிலும் 32 நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 16-ந்தேதி டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு போராட்டம் நாடு முழுவதும் நடைபெறும். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்