தமிழக அரசியல் கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்; இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள்

காவிரி பிரச்சினையில் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசியல் கட்சியினர், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-06-08 22:28 GMT

சென்னை,

திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;–

நீரின்றி அமையாது உலகு. தெரிந்திருந்தும் நாம் எதை செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த காவிரி நதி, கை நனைக்கக்கூட தண்ணீர் இல்லாமல் வற்றிப்போய் கிடக்கிறது. நாம் 40 லட்சம் ஏக்கரில் காவிரி நீரைக்கொண்டு விவசாயம் செய்த நிலங்கள் இன்று 8 லட்சம் ஏக்கர்களாக மாறிவிட்டன. அந்த 8 லட்சத்தில் ஒரே ஒரு ஏக்கரில் கூட இந்த பருவ விவசாயத்தை செய்ய முடியவில்லை.

ஜனாதிபதி தேர்தல்

நான் கேட்டுக்கொள்வதெல்லாம், ‘தமிழக அரசியல் கட்சிகளிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களும், விரைவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இம்முறை உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்த பகைகளை மறந்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

காவிரி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தின் அடிப்படையில் நீரைப் பெற்றுத்தருவதற்காக ஜனாதிபதி தேர்தலை இம்முறை புறக்கணித்து மத்திய அரசுக்கு நியாயத்தை உணர்த்த வேண்டும்.

நியாயமில்லை

ஜல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கை பார்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை இப்போதாவது உணருங்கள்.

இம்முறை தமிழகத்தை சார்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்தால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிரானவர்கள் நம் தமிழக அரசியல்வாதிகளைத்தவிர வேறு யாருமில்லை.  இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்