தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தபாலில் வெடி மருந்து அனுப்பி மீண்டும் மிரட்டல்

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தபாலில் வெடி மருந்து அனுப்பி மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-06-07 19:51 GMT

ஆவடி,

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டு முகவரிக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு தபால் வந்தது. அதில் அனுப்புனர் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்த தபாலை அவர் பிரித்து பார்த்தார்.

அந்த தபாலில் வெடி மருந்து மற்றும் திரி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதனுடன் ஒரு கடிதமும் ஒட்டி வைக் கப்பட்டு இருந்தது. அதில், “தமிழிசை சவுந்தரராஜன், மாட்டுக்கறி சம்பந்தமாக பேசுவதை நிறுத்திக்கொள். நாங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இது குறித்து தொடர்ந்து பேசினால் உன்னை நடமாட விடமாட்டோம்” என்று எழுதப்பட்டு இருந்தது.

போலீசில் புகார்

இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தபாலில் வெடி மருந்து அனுப்பி கொலை மிரட்டல் விடுத்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், அவருக்கு இதேபோல் மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

தற்போது மீண்டும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்