நீட் தேர்வில், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை

நீட் தேர்வில் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2017-06-06 20:01 GMT
மதுரை,

மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்காக கடந்த மாதம் 7-ந்தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் திருச்சியை சேர்ந்த மாணவி சக்திமலர்கொடி, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபாகிளாட்வின், மதுரையை சேர்ந்த ஜொனிலா, சூர்யா உள்பட பலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தும், இதுகுறித்து சி.பி.எஸ்.இ., தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

கட்டாயம் இல்லை

இந்தநிலையில் அந்த வழக்கில் சி.பி.எஸ்.இ. தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்ததன் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சி.பி.எஸ்.இ சார்பில் இதுபோன்ற தேர்வுகளை நடத்தி வந்தபோதும் எந்த பிரச்சினையும் எழுந்ததில்லை.

நீட் தேர்வை பொறுத்தவரை வினாத்தாள்கள் வெளியானதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சுமத்தப்படவில்லை. அதேபோல நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

தடையை நீக்க வேண்டும்

குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய 8 மொழிகளிலும், தலா 4 நிபுணர்கள் வீதம் 32 பேரை கொண்ட குழுவின் மூலமாக தான் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டன. அதோடு எளிமை, சராசரி, கடினம் என்ற அடிப்படையிலும் வினாக்கள் இடம் பெற்றுள்ளன.

8 மொழிகளில் 9.25 சதவீதத்தினரும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் 90.75 சதவீதம் பேரும் தேர்வு எழுதியுள்ளனர். தற்போது மதுரை ஐகோர்ட்டு விதித்துள்ள இடைக்கால தடையால் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கை தாமதமாகிறது. மருத்துவக்கல்வியின் தரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பதில்

தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வை கொள்கை அளவில் தமிழக அரசு எதிர்க்கிறது. நடந்து முடிந்த நீட் தேர்வில் மொழி வாரியாக வித்தியாசமான வினாத்தாள்களை வழங்கியிருப்பது தமிழகத்தின் பயத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளது. இந்த தேர்வு மாணவர்கள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு உணருகிறது. ஏற்கனவே நீட் தேர்வை அறிமுகப்படுத்தியபோதே மாநில அரசு எதிர்த்தது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை நடக்கிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பெரும்பாலும் நகரங்களில் தான் உள்ளன. மேல்நிலைப்பள்ளி தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வை அமல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இது நகர்புற மாணவர்களுக்கு நன்மை செய்வதாகவும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது.

ஆலோசிக்கவில்லை

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது 50 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. நீட் தேர்வால் இது குறையும். தேர்வு வினாத்தாள் தொடர்பாக மாநில அரசை சி.பி.எஸ்.இ. கலந்து ஆலோசிக்கவில்லை. இது மருத்துவ, பல்மருத்துவ சட்டத்துக்கு எதிரானது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே நியாயமான வெளிப்படையான கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அது சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை சட்டம் 2006-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி இங்கு மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.

எனவே தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ, பல் மருத்துவ மாணவர் சேர்க்கையை பின்பற்ற அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதான வழக்குகளுடன் இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற 12-ந்தேதி நடக்க உள்ளது.

மேலும் செய்திகள்