டி.டி.வி.தினகரன் – எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பை அரசியலாக்க கூடாது; அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

டி.டி.வி.தினகரன் – எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பை அரசியலாக்க கூடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Update: 2017-06-06 19:46 GMT

சென்னை,

அந்த எம்.எல்.ஏ.க்களுடன் தொகுதி நிலவரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டம் நடக்கும்போதே, நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தொகுதி பிரச்சினைகள்

தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் மாவட்ட வாரியாக அழைத்து பேசி வருகிறோம். அந்தவகையில் இன்று (நேற்று) 8 மாவட்ட எம்.எல்.ஏ.க்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் முதல்–அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

அந்த கருத்துகளின் அடிப்படையில் எல்லா தொகுதிகளிலும் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும், குறிப்பாக அடிப்படை கட்டமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று முதல்–அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ஜெயலலிதா அரசை நல்லமுறையில் அவர் வழிநடத்தி கொண்டிருக்கிறார்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

அரசியலாக்க கூடாது

கேள்வி:– ‘உங்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும், அமைச்சர் பதவி கூட பறிக்கப்படலாம்’ என்று எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியிருக்கிறாரே?

பதில்:– அருமை நண்பர் தங்க தமிழ்ச்செல்வன் சொன்னதை யாரும் பொருட்படுத்த தேவையில்லை. அதை மறந்துவிடவும்.

கேள்வி:– அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் முதல்–அமைச்சர் மாவட்ட வாரியாக சந்தித்து வரும்நிலையில், டி.டி.வி.தினகரனை சில எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதற்கு காரணம் என்ன?

பதில்:– தனிப்பட்ட முறையில் சில எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து இருப்பார்கள். இதனை அரசியலாக்க கூடாது. தமிழகத்தில் நிலையான ஆட்சி நடைபெறுகிறது, அது தொடரும். எனவே அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.

வழிகாட்டும் குழு

கேள்வி:– சசிகலா சிறையில் உள்ளார். டி.டி.வி.தினகரனை கட்சி பணியில் இருந்து ஒதுங்க சொல்லி விட்டீர்கள். தற்போது கட்சியின் தலைமை யாரிடத்தில் உள்ளது?

பதில்:– கட்சியில் வழிகாட்டும் குழு உள்ளது. அக்குழுவின் அடிப்படையிலே கட்சி வழி நடத்தப்பட்டு வருகிறது. கட்சியை வழிநடத்துவது குறித்து எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆட்சியை பொறுத்தவரை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு திறம்பட அரசை வழிநடத்துகிறார். தமிழக மக்களுக்கு எல்லாவித நன்மையும் கிடைக்கிறது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிலருக்கு கவலை இருக்கிறது. அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

அச்சுறுத்தல் இல்லை

கேள்வி:– எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து வரும் சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா?

பதில்:– ஜெயலலிதாவின் அரசுக்கு எந்த வித அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்படவில்லை. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது.  மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்