மூன்று திசைகளில் பயணிக்கும் அ.தி.மு.க.: ஓ.பன்னீர்செல்வம்–எடப்பாடி பழனிசாமி அணிகள் இணையுமா?

மூன்று திசைகளில் அ.தி.மு.க. பயணித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணைவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2017-06-05 21:59 GMT

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கியதால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. சசிகலா சிறை சென்ற பிறகு அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் கட்சி பொறுப்பை கவனித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கேட்டதால், தேர்தல் கமி‌ஷன் கட்சியையும், சின்னத்தையும் முடக்கியது. எடப்பாடி பழனிசாமி அணி அ.தி.மு.க. (அம்மா) என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்றும் அழைக்கப்பட்டது.

சிறை சென்ற தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் இனிமேல் கட்சி பொறுப்புகளில் தலையிடமாட்டார். நாங்களே கட்சி நிர்வாக பொறுப்புகளை கவனிப்போம் என்று அமைச்சர்கள் அறிவித்தனர்.

கட்சி சம்பந்தமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அறிக்கைகளும் வெளிவந்தன. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம்–எடப்பாடி அணிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இருதரப்பிலும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்ததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

ஜாமீனில் வந்தார்

டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளிவந்ததும், அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளராக நானே மீண்டும் தொடருவேன். என்னை கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறினார். ஆனாலும் ஜாமீனில் வந்த அவரை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை.

அதேசமயம் டி.டி.வி.தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ஜக்கையன், ஜான்கென்னடி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சாத்தூர் சுப்பிரமணியம், ஆம்பூர் பாலசுப்பிரமணியன், கதிர்காமு, தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, இன்பதுரை ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் அ.தி.மு.க. (அம்மா) அணியே இரண்டாக உடைந்துள்ளது.

மூன்று திசைகளில்

இதனால் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என 3 அணிகளாக மூன்று திசைகளில் அ.தி.மு.க. பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை பலமும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார், டி.டி.வி.தினகரன் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தார்.

பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடந்துவருகிறது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, மற்றும் ஜெயக்குமாரும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கட்சி பணிகளை நடத்த 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைவராக இருக்கட்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறிவருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கே.பாண்டியராஜன், செம்மலைக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும், பொதுச் செயலாளர் பதவி ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழுவை கூட்டி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஆட்சி கவிழுமா?

இதில் கே.பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கு அமைச்சர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இன்னும் 2 நாட்களில் பேச்சுவார்த்தை முடிந்து, அ.தி.மு.க. இரு அணிகளும் இணையும் என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையே எடப்பாடி அணியின் 122 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் பெரும்பான்மை 111 ஆக குறைந்துள்ளது. இதன்காரணமாக ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவானால் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் தெரிகிறது.

இதுகுறித்தும் பேச்சுவார்த்தையில் பேசப்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் இருதரப்பினரும் தற்போது எழுந்துள்ள பிரச்சினை குறித்தும், இணைப்பு குறித்தும் பேசினர்.

சட்டசபை கூட்டம் 14–ந் தேதி தொடங்க இருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்