விரைவான நீதி கிடைக்க நீதிபதிகளும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி

பொதுமக்களுக்கு விரைவான நீதி கிடைக்க நீதிபதிகளும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

Update: 2017-06-04 23:45 GMT
சேலம்,

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 98 வக்கீல் அறைகள், வக்கீல்களுக்கான கூட்ட அரங்கம் மற்றும் உணவுக்கூடம் ஆகியவை கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.8.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக 30 வக்கீல் அறைகள், கூட்ட அரங்கம் மற்றும் உணவுக்கூடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டுமான பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.கே.சசிதரன், கே.கலையரசன், ஆர்.சுப்பிரமணியன், சேஷசாயி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

விழாவில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:-

வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக நீதித்துறை விளங்குகிறது. நீதித்துறை சமூகத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக நீதித்துறைக்காக பங்காற்றியவர்களில் சேலத்தை சேர்ந்த ராஜாஜி சிறந்த இடத்தை பெற்றுள்ளார். சேலம் வக்கீல்கள் சங்கத்தில் அவர் பணியாற்றியதை மற்ற வக்கீல்கள் பெருமையாக கருத வேண்டும். மூத்த வக்கீல்கள், நீதித்துறையில் பணியாற்றிய முன்னோர்கள் சமூகத்திற்கு எத்தகைய வகையில் நன்மை கிடைத்திட உழைத்தார்களோ அதனை பின்பற்றி தற்போது உள்ள வக்கீல்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் அளிக்கப்படுவதால், பொதுமக்களுக்கு விரைவான நீதி கிடைக்க நீதிபதிகளும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும். வாதத்திற்கு வக்கீல்கள் வரும்பொழுது, அந்த வழக்கின் பின்புலத்தை முழுமையாக அறிந்து வர வேண்டும். சமூகத்தில் காலமாற்றத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீதிமன்ற அணுகுமுறையில் மாற்றம்

நீதிமன்ற அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. நீதிமன்றங்கள் சரியான நீதியை வழங்கிடும் என்பதை மக்களுக்கு உணர்த்திட வேண்டும். வக்கீல்களும், நீதிபதிகளும் சேவை மனப்பான்மையோடு பணியாற்றி தீர்ப்பு வழங்கும் முனைப்போடு செயல்பட வேண்டும். இதில் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் சரிசமமான பங்கு உள்ளது.

இதை உணர்ந்து நீதிமன்ற நடவடிக்கைக்கு, வக்கீல்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன். சட்ட உதவி மையங்களில் ஏழை மக்களின் வழக்குகளை வக்கீல்கள் எடுத்து அவர்களுக்காக பணியாற்ற வேண்டும். போதிய கட்டணம் இல்லாத பட்சத்திலும், உதவும் மனப்பான்மையிலும் வழக்கை ஏற்க வேண்டும். சமூகத்தில் பெண்கள், குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை வக்கீல்கள் துரிதமாக முடித்து நீதி கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்