தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது விவசாயிகளை வஞ்சிக்கின்ற செயலாகும்.

Update: 2017-06-03 18:45 GMT
சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது விவசாயிகளை வஞ்சிக்கின்ற செயலாகும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய வறட்சி நிவாரணம் சுமார் 70 சதவீதத்துக்கும் மேல் இன்னும் கொடுக்கப்படவில்லை.

வறட்சி, கடன் பாக்கி ஆகியவற்றால் சுமார் 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் உயிரிழந்த விவசாயிகளை சரியாக கணக்கிடாமல் குறைவான எண்ணிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் நிலவும் விவசாய தொழிலின் தற்போதைய உண்மைநிலைக்கு ஏற்றவாறு, விவசாயிகளை வஞ்சிக்காமல், அவர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்குதல், கடன் தள்ளுபடி செய்தல், தற்கொலை செய்து கொண்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்குதல் மற்றும் விவசாய தொழிலை காப்பாற்றுவதற்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்