கவிஞர் அப்துல் ரகுமான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

கவிஞர் அப்துல் ரகுமான் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2017-06-02 21:30 GMT
சென்னை,

கவிஞர் அப்துல் ரகுமான் சென்னையில் நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

கவிக்கோ அப்துல் ரகுமான் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு தலைவர் கருணாநிதி சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், இலக்கிய உலகத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. மீது பற்றும், தலைவர் கருணாநிதி மீது பாசமும், தமிழுடன் இணை பிரியாத வாழ்வும் நடத்திய கவிஞர் அப்துல் ரகுமானின் பிரிவு தமிழுலகத்தை தவிக்கவிட்டுள்ள இழப்பு, குறிப்பாக இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

‘விழுந்தாலும் விதைபோல விழுவார்’ என்று கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு கவிதையில் அண்ணாவைப் பற்றி கூறியிருக்கிறார். இன்றைக்கு கவிஞர் அப்துல் ரகுமான் ‘விதை போல் விழுந்திருக்கிறார்’. அவர் மறைந்தாலும், அவரது கவிகள் பாடிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

கவிக்கோ என்று போற்றப்பட்ட ஈடு இணையற்ற இலக்கியவாதி அப்துல் ரகுமான் சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

கவிக்கோ எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். தமிழ் சார்ந்த விஷயங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இன்னும் சில மாதங்களில் கவிக்கோவுக்கு முத்து விழா எடுக்க இலக்கிய உலகம் ஆயத்தமாகி வந்த வேளையில், அவரது மறைவு கூடுதல் சோகத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:-

காலத்தால் அழியாத இலக்கியங்களைப் படைத்த கவிக்கோ என்ற கவிதைப் பறவை விண்ணில் சிறகடித்துப் பறந்துவிட்டது. உடல் ஓய்ந்து உயிர் சாய்ந்தாலும், மானத் தமிழர்களின் நெஞ்சத்தில் நிலைபெற்றுவிட்ட மாபெரும் லட்சியக் கவிஞன் கவிக்கோ, என் இதயத்தில் சிகரம்போல் உயர்ந்து நிற்பதால், தமிழகத்தின் கலீல் கிப்ரான் கவிக்கோ என்றே மேடைகளில் அவரைப் போற்றி வந்தேன்.

பொடா சிறைவாசத்தில் நான் 19 மாதங்கள் அடைபட்டுக் கிடந்தபோது வேதனையுற்று அவர் தீட்டிய கவிதை எனக்குக் கிடைத்த பட்டயம். தமிழில் கவிதை என்று சொன்னால், கவிக்கோவைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. அவருடைய கருத்துகள், அவர் தந்த படைப்புகள், கவிதையால் அவர் காட்டிய பாதை, அவர் வாழ்ந்த வாழ்க்கை தமிழகத்தின் கவிதைத் தலைமுறைக்கு என்றைக்கும் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.

சு.திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:-

தமிழ் இலக்கியத்தின் சுவையை தமது கவிதை வரிகளால் பெருமைப்படுத்தி வந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஜனநாயகம், மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றில் ஆழமான பற்றும், ஈடுபாடும் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கும், அன்னை தமிழுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அப்துல் ரகுமானின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் மிகுந்த துயரத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

தமிழகத்தின் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், இலக்கியவாதி அப்துல் ரகுமான் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். கவிக்கோ எனப் போற்றப்படும் இவர் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

புதுக் கவிதை உலகின் முன்னோடியும், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியருமான அப்துல் ரகுமான் மறைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சிக்கும், வருத்தத்திற்கும் உரியதாகும். தமிழில் அவர் படைத்த இலக்கியங்களும், பன்னாட்டு இலக்கியங்களில் இருந்தும், பன்னாட்டு இலக்கிய மரபில் இருந்தும் அவர் தந்த செழுமையான படைப்புகளும் நீங்காப் புகழுடையவையாகும்.

அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், தமிழ்க் கவிதை உலகத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு செய்தி அறிந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அவரது மறைவுக்கு அஞ்சலி செய்வதோடு, அவரது குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இவரது மறைவு தமிழ்நாட்டிற்கும், அனைத்து தமிழ் இலக்கியவாதிகளுக்கும், கவிஞர்களுக்கும் ஓர் பேரிழப்பு. இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் கவிஞர் அப்துல் ரகுமான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்