ராட்சத வாகனங்களைப் பயன்படுத்தி, சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

ஜா கட்டர் என்ற இரண்டு ராட்சத வாகனங்களைப் பயன்படுத்தி, சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

Update: 2017-06-02 05:47 GMT
சென்னை,

தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் கீழ்தளத்தில் இருந்து முதலில் புகை மட்டுமே வந்தது. ஆனால் அந்த புகையை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக சில மணி நேரங்களில் தீ மளமளவென பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அன்று பிற்பகலில் தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது. தீயணைப்பு வீரர்கள் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைத்த போதிலும் அதனை கட்டுப் படுத்த முடியவில்லை.

இதனால் 7 மாடிகளுக்கும் தீ பரவியது. சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவது மாக எரிந்தது. கடையில் இருந்த எளிதில் தீப்பற்றக் கூடிய ஜவுளிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் அனைத் தும் முற்றிலுமாக எரிந்து  நாசமானது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 400 கோடிக்கு மேல் சேதம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் மேலிருந்து 4 மாடிகள் இடிந்து விழுந்தன. அப்போது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து எந்த நேரமும் கட்டிடத்தின் 7 மாடிகளும் இடிந்து விழலாம் என்கிற அச்சம் நிலவியது. இதனை தொடர்ந்து சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் 2 மணி நேரத்தில் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்று தெரிவித்தார்.
ஆனால் உடனடியாக கட்டிடத்தை இடிக்கும் பணி எதுவும் தொடங்கவில்லை. நேற்று மாலை அல்லது இரவில் கட்டிடம் இடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை வரையிலும் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கவில்லை.

கட்டிடத்தின் பின் புறத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் இருந்து இடித்து தள்ளப்படுகிறது. இதற்காக பார்க்கிங் பகுதியில்  லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி கட்டிட இடிபாடுகளை கொண்டு கொட்டி மூடப்பட்டது. பார்க்கிங் பகுதியில் தளம் அமைக்கும் பணி நடந்தது. கீழ் தளத்தில் இருந்து சுமார் 2 மாடி உயரத்துக்கு தளம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்த பணிகள் முடிந்த பின்னர் தான் அதன் மீது கட்டிடத்தை உடைக்கும்  ராட்சத எந்திரம் ஏற்றப்படும். அதன் பிறகே ராட்சத எந்திரத்தில் உள்ள உயரமான ஸ்கை லிப்ட் மூலமாக கட்டிடம் இடிக்கப்பட உள்ளது. இந்த தளம் அமைக்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடி வடையாத காரணத்தாலேயே கட்டிடத்தை இடிக்கும் பணியில் தொடர்ந்து  தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு ஜா கட்டர் என்ற இரண்டு ராட்சத வாகனங்களைப் பயன்படுத்தி, சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

கட்டிட இடிப்பு பணி நடைபெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவக் குழு வருகை தந்துள்ளது.

மேலும் செய்திகள்