காசிமேட்டில் படகில் சென்று கங்கை அமரன் நூதன பிரசாரம் நடுகடலில் மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார்.

Update: 2017-04-03 20:45 GMT

சென்னை,

தினமும் தொகுதி மக்களிடம் பாட்டு பாடி ‘தாமரை’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகு மூலம் நடுகடலுக்கு சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில மீனவரணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர்கள் செம்மலர் சேகர், தாமோதரன் உள்பட நிர்வாகிகளும் படகில் சென்றனர்.

நடுகடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர்களிடம், ‘‘மீனவர்கள் படும் கஷ்டத்தை நேரில் அறிந்து வாக்கு சேகரிப்பதற்காக படகில் உங்களை தேடி வந்துள்ளேன். என்னை நீங்கள் வெற்றி பெறச்செய்தால் உங்களது வாழ்வாதாரம் மேம்பட அனைத்து வகையிலும் உறுதுணையாக இருப்பேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து உங்களது கோரிக்கைகளை அளிக்கலாம். மீனவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்ற நண்பராக இருக்கிறார். எனவே ‘தாமரை’ சின்னத்துக்கு வாக்களித்து தமிழகத்தில் ‘தாமரை’ மலர வித்திடுங்கள்’’ என்றார்.

கங்கை அமரனின் நூதன பிரசாரம் வாக்காளர்கள் மற்றும் மீனவர்களை வெகுவாகவே கவர்ந்தது.

மேலும் செய்திகள்