ம.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா வைகோ கலந்து கொண்டார்
சென்னையில் ம.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
சென்னை,
ம.தி.மு.க. சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் தொழில் அதிபர்கள் பழனி ஜி.பெரியசாமி, வி.ஜி.சந்தோசம், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், பின்னணி பாடகி பி.சுசீலா, பாடலாசிரியர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக நடிகை சரோஜாதேவி கலந்து கொண்டார்.
எம்.ஜி.ஆரிடம் அரசு உதவியாளர்களாக பணியாற்றியவர்களும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுமான வரதராஜன், பிச்சாண்டி, சம்பத், தனி உதவியாளர்கள் மாணிக்கம், மகாலிங்கம், பாதுகாப்பு அதிகாரி சங்கரசுப்பு, மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன், சமையல்காரர் மணி ஆகியோரும் வைகோவின் மனைவி ரேணுகாதேவி, ம.தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். படப்பாடல்கள்
நடிகை சரோஜாதேவி பேசுகையில், “முதன்முதலாக நான் நடிக்க வந்தபோது என்னை அன்போடு வரவேற்றவர் எம்.ஜி.ஆர். தான். கலைத்துறையில் என் தெய்வமாகவே அவரை பார்க்கிறேன். உலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர். புகழ் நிலைத்திருக்கும்” என்றார்.
பாடகி பி.சுசீலா, சினிமா டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், புலவர் புலமைப்பித்தன், தொழில் அதிபர் பழனி ஜி.பெரியசாமி ஆகியோரும் எம்.ஜி.ஆர். சிறப்புகளையும், தனிப்பண்புகளையும் பெருமைப்படுத்தி பேசினர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, “எனக்கு பல நேரங்களில் அமைதியை தருவது எம்.ஜி.ஆர். பட பாடல்கள் தான். திடீரென்று என்ன எம்.ஜி.ஆர். மீது காதல்? என்று என்னை விமர்சித்தவர்களும் உண்டு. எந்த அரசியல் ஆதாயத்துக்காகவும் இந்த விழாவை நான் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர். எனும் மக்கள் கலைஞனுக்கு எடுக்கப்படும் கலை விழா தான் இது. நூற்றாண்டு தொடக்க விழா போல, அவரது நூற்றாண்டு நிறைவு விழாவையும் ம.தி.மு.க. நடத்தும்” என்றார்.