அ.தி.மு.க. அழிந்து விட்டது; தி.மு.க. அழியப் போகிறது பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்
தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்கு பா.ஜனதா ஒன்றால்தான் முடியும் என்பதை உணர்ந்து விட்டார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறிஉள்ளார்.
சென்னை,
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் மக்கள் கைவிட்டு விட்டார்கள். ஒரு காலத்தில் அ.தி.மு.க. என்றால் பெண்கள் ஆதரவு அதிகமாக இருந்தது. இப்போது அந்த கட்சியை யாரும் விரும்பவில்லை. கிட்டத்தட்ட அந்த கட்சி அழிந்து விட்டதாகவே கருதுகிறேன். தி.மு.க. அழிந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு அரசியல் குழப்பங்களுக்கு இடையேயும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் யாருமே விரும்பவில்லை. அரசியல் கட்சிகளும் தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டுவர விரும்பவில்லை.
வாக்கு சதவீத அடிப்படையில் கட்சிகளின் பலத்தை நிர்ணயிக்க முடியாது. இந்த கட்சிகளின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். ஏற்கனவே வாங்கிய வாக்கு சதவீதத்தை அடிப்படையாக வைத்து ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அதனால் எந்த பலனும் கிடைக்காது. தி.மு.க. படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது.
நீட் தேர்வை கடந்த ஆண்டு வேண்டாம் என்றார்கள். இந்த ஆண்டு தமிழிலும் எழுத அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு ஆண்டில் அரசு மாணவர்களை தயார் படுத்தவில்லை. அரசு பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. உலக தரத்தில் மாணவர்களை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் இந்திய தரத்துக்கு மாணவர்களை உயர்த்த விடமாட்டோம் என்று சொன்னால் எப்படி? நீட் தேர்வு மாணவர்களுக்கு அவசியமானது. மாணவர்கள் தலையெழுத்தை அரசியல்வாதிகள் நிர்ணயிக்ககூடாது. மந்திரிகளின் தலையெழுத்தை வேண்டுமானால் நீங்கள் நிர்ணயியுங்கள். மாணவர்களின் நலனில் விளையாட வேண்டாம்.
நெடுவாசல் போராட்டத்தை பொறுத்தவரை மக்கள் விருப்பத்துக்கு மாறாக தேவையில்லாமல் எந்த திட்டத்தையும் புகுத்த மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டோம். ஆனால் மக்களுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்வது யார்?
சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும், சேலத்திலும் இருந்து கொண்டா முடிவு செய்வது? அந்த ஊர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்த திட்டத்தால் நன்மையா, தீமையா என்பதெல்லாம் அவர்களிடம் விளக்கப்படும். அதன்பிறகு அவர்கள் முடிவு செய்வார்கள்.
மக்களிடம் புதிய தேடல் தொடங்கி விட்டது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்கு பா.ஜனதா ஒன்றால்தான் முடியும் என்பதை உணர்ந்து விட்டார்கள். பிரதமர் மோடியை ஏற்கும் தன்மை வளர்ந்து உள்ளது. பா.ஜனதாவின் இந்த வளர்ச்சியை தாங்க முடியாமல் தான் இந்த மாதிரி போராட்டங்களை சில கட்சிகளும், பயங்கரவாத அமைப்புகளும் தூண்டி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.