5.93 கோடி வாக்காளர்களுடன் இறுதி வாக்காளர் பட்டியல் 5–ந் தேதி வெளியிடப்படுகிறது

தமிழகத்தில் 5 கோடியே 93 லட்சம் வாக்காளர்களுடன் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 5–ந் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்படுவதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த

Update: 2017-01-02 19:49 GMT

சென்னை,

தமிழகத்தில் 5 கோடியே 93 லட்சம் வாக்காளர்களுடன் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 5–ந் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்படுவதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1–ந் தேதி வெளியிடப்பட்டு, அந்த மாதம் 30–ந் தேதி வரை திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்காக 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுதவிர இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களின் உண்மை தன்மை அறிவதற்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

5.93 கோடி வாக்காளர்கள்

இதனை முடித்துக்கொண்டு விண்ணப்பங்களை இறுதிவாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்து கொண்டனர். இந்த ஆய்வின் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளன.

அதன்படி புதிதாக 15 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 3 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் 5 கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இறுதிபட்டியல் வெளியீடு

இந்த இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்ததால் 5–ந் தேதி (வியாழக்கிழமை) இறுதிவாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிடுகிறார்.

முதன் முதலாக வாக்காளராக தகுதி பெறுவோருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக தரப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்