நூலக நண்பர்கள் திட்டத்திற்கு 200 தன்னார்வலர்கள் தேர்வு-மாவட்ட மைய நூலக அலுவலர் தகவல்

அரியலூரில் நூலக நண்பர்கள் திட்டத்திற்கு 200 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட மைய நூலக அலுவலர் ஷான்பாஷா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-11-03 18:20 GMT

நூலக நண்பர்கள் திட்டம்

கொரோனா காலத்தில் நூலகங்கள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்ட போதும் நூலகங்களுக்கு வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக முதியவர்களுக்கு நூலகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நூலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்தநிலையில் நூலக வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் நூலகங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் தங்களது வீடுகளில் இருந்து நூல்களை வாசிக்க உதவும் வகையில் நூலக நண்பர்கள் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

200 தன்னார்வலர்கள் தேர்வு

வீடுகளுக்கே நேரடியாக சென்று புத்தகங்களை வினியோகிக்கும் நூலக நண்பர்கள் திட்டத்திற்கு அரியலூர் மாவட்டத்தில் 200 தன்னார்வலர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைவோருக்கு அடையாள அட்டை, புத்தகங்களை எடுத்துச்செல்ல பை ஆகியவை வழங்கப்படும். முதலில் 25 நூல்கள் வழங்கப்பட்டு அவற்றை வினியோகித்த பிறகு மீண்டும் நூல்கள் வழங்கப்படும்.

இவ்வாறு மாதத்திற்கு 2 முறை நூல்கள் வழங்கப்படும். நூலகத்திலிருந்து நூல்களை பெற்று செல்வது, நூல்களை வினியோகிப்பது மற்றும் வினியோகித்த நூல்களை திரும்ப பெற்று வந்து நூலகத்தில் ஒப்படைப்பது ஆகிய பணிகளை தன்னார்வலர்கள் மேற்கொள்வார்கள். இத்திட்டமானது வருகிற 14-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்