20 குழுக்களாக போலீசார் சாராய வேட்டை

வேலூர் மாவட்டத்தில் 20 குழுக்களாக போலீசார் சாராய வேட்டை நடத்தினர். அல்லேரி மலையில் டி.ஐ.ஜி. முத்துசாமி சோதனை மேற்கொண்டார்.

Update: 2023-06-17 12:14 GMT

சாராய வேட்டை

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் தனிப்படை போலீசார் அணைக்கட்டு அல்லேரி மலைப்பகுதியில் சாராய வேட்டை நடத்தினர்.

இந்த சாராய வேட்டையில் டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. சாராய ஊறல்கள், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 குழுக்களாக

மேலும் மாவட்டம் முழுவதும் 20 குழுக்களாக ஒரு குழுவில் 8 போலீசார் வீதம் 160 போலீசார் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு சம்பந்தமாக திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 870 லிட்டர் சாராயம், 18 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார்சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்