பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல்
பேரணாம்பட்டில் பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் ஆகியோர் வேலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் கஞ்சா குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பஸ் நிலையம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பயணிகள் போல் இரண்டு பேர் கையில் பைகளுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
2 வாலிபர்கள் கைது
இதனையடுத்து போலீசார் அந்த இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டம், ரிஹிதா பகுதியை சேர்ந்த சவுமியாரஞ்சன் சுனா (வயது 28), பாலாங்கிர் மாவட்டம் கமல்லோகா பகுதியை சேர்ந்த பிக்காஷ்பேக் (26) என்பதும், பெங்களூருக்கு கஞ்சாவை கொண்டு செல்வதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.