போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 கோடி கஞ்சா அழிப்பு- மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

‘போதை இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 கோடி கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது.

Update: 2023-08-11 21:27 GMT

இட்டமொழி:

'போதை இல்லாத தமிழ்நாடு' திட்டத்தில், தென்மண்டல அளவில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பொத்தையடி அசெப்ட்டிக் சிஸ்டம்ஸ் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் தீயில் எரியூட்டி அழிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதன்படி, நெல்லை மாவட்டத்தில் 21 குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 29.990 கிலோ கஞ்சா, நெல்லை மாநகரத்தில் 20 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 29.660 கிலோ கஞ்சா, தென்காசி மாவட்டத்தில் 7 வழக்குகளில் 10.650 கிலோ கஞ்சா, தூத்துக்குடி மாவட்டத்தில் 43 வழக்குகளில் 465.010 கிலோ கஞ்சா, கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 வழக்குகளில் 155.760 கிலோ கஞ்சா, மதுரை மாவட்டத்தில் 45 வழக்குகளில் 547.007 கிலோ கஞ்சா, ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 வழக்குகளில் 422.500 கிலோ கஞ்சா, திண்டுக்கல் மாவட்டத்தில் 318 வழக்குகளில் 1,259.330 கஞ்சா, தேனி மாவட்டத்தில் 431 வழக்குகளில் 2,480.588 கிலோ கஞ்சா, மதுரை மாநகரத்தில் 7 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3030.475 கிலோ கஞ்சா என மொத்தம் 967 குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8 ஆயிரத்து 431 கிலோ கஞ்சாவை போலீசார் தீயிலிட்டு அழித்தனர். இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், தென்மண்டல போதைப்பொருட்கள் ஒழிப்புக்குழு தலைவருமான பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சிலம்பரசன் (நெல்லை), சாம்சன் (தென்காசி), மதுரை மாநகர துணை கமிஷனர் பிரதீப், மதுரை தடயவியல் ஆய்வக உதவி இயக்குனர் வித்யாராணி, பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டை போதைப்பழக்கம் இல்லாத மாநிலமாக மாற்ற செயல்பட்டு வருகிறோம். அதன்படி பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை சரகத்தில் உள்ள 55 பள்ளி, கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் 505 சுவரொட்டி, விளம்பர பேனர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்