அரசு பஸ் -சரக்கு வேன் மோதலில் 2 வாலிபர்கள் பலி
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் பங்கேற்று விட்டு திரும்பிய போது அரசு பஸ்- சரக்கு வேன் மோதலில் 2 வாலிபர்கள் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர். 2 காளைகளும் செத்தன.
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி உள்பட பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த காளைகள் களமிறங்கின. இதேபோல மாடுபிடி வீரர்களும் பங்கேற்று போட்டிப்போட்டு காளைகளை அடக்கினர். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற பின் காளைகளுடன் அதன் உரிமையாளர்கள், அவர்களுடன் வந்தவர்கள் சரக்கு வேனில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செவலூர் பகுதியில் இருந்து காளைகளை அழைத்து வந்திருந்தவர்கள் ஒரு சரக்கு வேனில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். அந்த சரக்கு வேனில் 3 காளைகளும், 6-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.
2 பேர் பலி
இந்த நிலையில் சரக்கு வேன் திருவரங்குளம் அருகே கந்தகட்டி அய்யனார் கோவில் எதிர்புறம் வநதுகொண்டிருந்தது. அதேநேரத்தில் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அரசு பஸ்சும் சென்றது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் சரக்கு வேன் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் முன்பக்கம் அமர்ந்திருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பின்னால் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
மேலும் 3 காளைகளும் காயமடைந்தன. இதில் 2 காளைகள் சாலையில் தூக்கிவீசப்பட்டன. சரக்கு வேனில் இடிபாடுகளில் சிக்கிய டிரைவரான பூலாங்குளத்தை சேர்ந்த விக்கி (வயது 30), காளைகளை அழைத்து வந்த செவலூரை சேர்ந்த மதியழகனும் (25) படுகாயமடைந்து பலியாகினர். மேலும் ஒரு காளை சரக்கு வேனிலேயே உடல் நசுங்கி செத்தது. தூக்கி வீசப்பட்ட 2 காளைகளில் ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காளை படுகாயத்துடன் உயிருக்கு போராடியது.
12 பேர் படுகாயம்
இதேபோல அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது. இந்த விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயமடைந்திருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த காளைக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை இடிபாடுகளில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
காயமடைந்தவர்களில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் புதுக்கோட்டை மறவப்பட்டியை சேர்ந்த ரெங்கசாமி (42), ஆலங்குடியை சேர்ந்த கண்டக்டர் சின்னபாண்டியன் (34), டிக்கெட் பரிசோதகர் ராஜேந்திரன் (54), பயணிகளில் புதுக்கோட்டை நிசி ரத்னா (30), கறம்பக்குடி கருப்பையா (43), பாஸ்கர் (49) உள்ளிட்டோரும், சரக்கு வேனில் வந்த விராலிமலையை சேர்ந்த அருண்பாண்டி (20), பாலா (21), செவலூர் அழகு சுசி (26), தர்ம அழகு (26), குணசீலன் (22), சந்தோஷ் (24) ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காளைகளின் உரிமையாளர்கள் செவலூரில் இருந்து புறப்பட்டு வந்தனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இறந்து கிடந்த காளைகளை கண்டு அப்பகுதியினர் பெரும் சோகமடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தினால் புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. விபத்துக்குள்ளான பஸ் மற்றும் சரக்கு வேனை போலீசார் ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.