தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி

நெல்லை அருகே நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் உயிர் தப்பினார்.

Update: 2023-05-08 20:57 GMT

ஸ்ரீராம்-அருண்

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருடைய மகன் சக்தி (வயது 25). இவர் சென்னையில் ெரயில்வே மெயில் சர்வீசில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய தாயார் மற்றும் குடும்பத்தினருடன் நெல்லையை அடுத்த திருவேங்கடநாதபுரத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். இங்கு அவருக்கு திருமண ஏற்பாடு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சக்தியின் நண்பர்களான சென்னை ஆயிரம்விளக்கு ஆசிஸ் முல்க் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீராம் (25), மாடர்ன் ஸ்கூல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆட்டோ டிரைவர் அருண் (24), மோர்ஸ் ரோடு 9-வது தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் வினோத் (24) ஆகிய 3 பேரும் சக்தியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவேங்கடநாதபுரத்துக்கு நேற்று காலையில் வந்தனர். பின்னர் மதியம் சக்தி, அவருடைய தம்பி முரளி, சக்தியின் நண்பர்களான ஸ்ரீராம், அருண், வினோத் ஆகிய 5 பேரும் திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீராம், அருண், விேனாத் ஆகிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். உடனே சக்தி, அவருடைய தம்பி முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து வினோத்தை காப்பாற்றினர். எனினும் ஸ்ரீராம், அருண் ஆகிய 2 பேரையும் காப்பாற்ற முடியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக்தி, முரளி ஆகிய 2 பேரும் கூச்சலிட்டனர். இதுகுறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு ஸ்ரீராம், அருண் ஆகிய 2 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்களின் உடல்களை சுத்தமல்லி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீரில் தத்தளித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்ட வினோத்தை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான 2 பேர் குறித்து உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பலியான ஆட்டோ டிரைவர் அருண் வீட்டுக்கு ஒரே மகன் ஆவார். இவருக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்திருந்தனர். இந்த நிலையில் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ரெயில் மூலம் நெல்லை சென்றுள்ளார். அவருடன் இந்த விபத்தில் பலியான ஸ்ரீராம், உயிர் தப்பிய வினோத் ஆகியோரும் ஒன்றாக சென்றனர்.

அவர்கள் சென்னையில் இருந்து செல்லும் போதே தாமிரபரணி ஆற்றில் உற்சாக குளியல் போட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். அதே ஆர்வத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இந்த நிலையில் பலியான ஸ்ரீராம் உடலை பெற்றுக் கொள்வதற்காக அவரது பெற்றோர் சென்னையில் இருந்து உடனடியாக நெல்லைக்கு விரைந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்து திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த வேளையில் அருண் பலியானது பெண் வீட்டாரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான ஸ்ரீராம் தனியார் வங்கி ஒன்றில் கடனை வீட்டுக்கு சென்று வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இவர் தனது வீட்டில் நண்பரின் திருமண நிகழ்ச்சி முடிந்த கையோடு சென்னை திரும்பி விடுவோம் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்