ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது - 1 டன் அரிசி பறிமுதல்

மதுரையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-25 19:56 GMT


மதுரையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி கடத்தல்

மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ரோந்துகள் மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சாப்டூர்-பேரையூர் ரோட்டில் மதுரை மண்டல ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு சரக்கு வாகனம் வந்தது. அதில் டிரைவர் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

28 மூடைகள்

இதனை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வாகனத்தில் சோதனை செய்தனர். அப்போது, அதில், 40 கிலோ எடை கொண்ட 28 மூடை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி பாரதிராஜா (வயது 25), அய்யனார்புரம் கனிமாரி (25) என்பது தெரியவந்தது. அவர்கள், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், வாகனத்தில் கடத்தி வந்த 1120 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்