காதலர் தினத்தை கொண்டாட ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

கண்டாச்சிபுரம் அருகே காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது

Update: 2023-02-12 18:45 GMT

திருக்கோவிலூர்

ஆடு திருடிய வாலிபர்கள்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி ரேணுகா (வயது 36). இவர் தனது வீட்டு வாசல் முன்பு பட்டி அமைத்து, 10 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று காலை 6 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்த ரேணுகா வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது 2 வாலிபர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் திருடி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகா திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

காதலர் தினம் கொண்டாட...

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ஆடு திருடிய வாலிபர்களை மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானகுமார், பொன்னுரங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் செஞ்சி பீரங்கிமேடு பகுதியைச் சேர்ந்த மணிராம் மகன் அரவிந்தகுமார் (20), செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் மகன் மோகன் (20) ஆகியோர் என்பதும், நாளை(செவ்வாய்க்கிழமை) காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு கையில் போதிய பணம் இல்லாததால் ஆட்டை திருடி விற்று கிடைக்கும் பணத்தில் காதலர் தினத்தை கொண்டாட இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும், போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஆடு திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்