ஈரோட்டில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

ஈரோட்டில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 10¼ பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2022-06-20 21:14 GMT

ஈரோடு:

ஈரோட்டில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 10¼ பவுன் நகை மீட்கப்பட்டது.

2 பேர் சிக்கினர்

ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று ஈரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிள்களில் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ஜனா என்கிற ஜனகராஜ் (22), பெருமாநல்லூர் பாலசமுத்திரத்தை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரபாகரன் (20) ஆகியோர் என்பதும், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

10¼ பவுன் நகை

விசாரணையில், ஜனகராஜூம், பிரபாகரனும் மோட்டார் சைக்கிளில் சென்று தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் ஜெயலட்சுமி, ஈ.பி.பி. நகரில் பிருந்தா உள்பட ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 4 பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், பெருந்துறையில் 2 பெண்களிடமும், வெள்ளோட்டில் ஒரு பெண்ணிடமும் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக ஜனகராஜ், பிரபாகரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம் 10¼ பவுன் நகையை போலீசார் மீட்டனர். மேலும், நகை பறிப்பு சம்பவத்தில் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்