அரசு மதுபாட்டில்கள் விற்ற 2 வாலிபர்கள் கைது
சின்னசேலம் அருகே தடையை மீறி அரசு மதுபாட்டில்கள் விற்ற 2 வாலிபர்கள் கைது டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சின்னசேலம்
சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நைனார் பளையத்திலிருந்து வி.கிருஷ்ணாபுரம் சாலையில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடை அருகே அரசு மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட்மனோ தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது டாஸ்மாக் கடை அருகில் உள்ள மரவள்ளி தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனைசெய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சின்னசேலத்தை அடுத்த செம்பாக்குறிச்சி கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன்(வயது 25), கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அரசங்குடியை சேர்ந்த பரமசிவம் மகன் வேல்முருகன்(32) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 988 மதுபாட்டில்கள், ரூ.6 ஆயிரத்து 370 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.
மேலும் இவர்களுக்கு மதுபாட்டில்களை சப்ளை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், விற்பனையாளர் செல்லதுரை ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருவள்ளுவர் தினத்தன்று தடையை மீறி அரசு மதுபாட்டில்கள் விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.