சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வால்பாறை
பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போதை ஆசாமிகள்
வால்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அக்காள், தங்கை என 2 சிறுமிகள் நேற்று முன்தினம் இரவில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு அரசு பஸ்சில் வந்தனர். அந்த பஸ் நேராக வால்பாறைக்கு வராமல் கருமலை எஸ்டேட்டை சுற்றி வரக்கூடியது என்பதால், அவர்கள் 40-வது கொண்டை ஊசி வளைவில் இறங்கி மற்றொரு அரசு பஸ்சில் ஏறுவதற்காக அய்யர்பாடி ரோப்வே எஸ்டேட் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் காத்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக வால்பாறை அருகே உள்ள கல்லாறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த முகமது செரீப்(வயது 21), பாலாஜி(25), ரிசாத் ஆகிய 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
சிறுமிகளுக்கு தொல்லை
இதையடுத்து நிழற்குடையில் நின்றிருந்த 2 சிறுமிகளுக்கும், அந்த வாலிபர்கள் தொல்லை கொடுத்து தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் கூச்சலிட்டனர். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே அங்கிருந்து 3 வாலிபர்களும் தப்பி ஓடினர்.
இதற்கிடையில் அந்த வாலிபர்கள் பிடித்து இழுத்ததில், ஒரு சிறுமிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவள், வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள். இதுகுறித்த புகாரின்பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
கைது
மேலும் தப்பி ஓடிய வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், கருமலை பாலாஜி கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் முகமது செரீப் மற்றும் பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். ரிசாத், தப்பி ஓடி விட்டார். அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.