ஓடும் பஸ்சில் நகை திருடிய 2 பெண்கள் கைது
சேத்தியாத்தோப்பு அருகே ஓடும் பஸ்சில் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.;
சேத்தியாத்தோப்பு:
புவனகிரியை சேர்ந்தவர் மாலிக்ஜான் மனைவி தில்ஷாத் பேகம். இவர் சம்பவத்தன்று புவனகிரியில் இருந்து வடலூருக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தபோது அவரது பையில் 7 பவுன் நகைகள் இருந்த சிறிய பையை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக கைதாகி கடலூர் சிறையில் இருக்கும் சென்னை பெத்தேரி பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி வேளாங்கண்ணி(வயது 26), மாணிக்கம் மனைவி சத்யா(24) ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது தில்ஷாத்பேகத்தின் நகை பையை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகையையும் பறிமுதல் செய்தனர்.