கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து கேரளாவுக்கு மினி லாரியில் கடத்தி செல்ல முயன்ற 2½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2022-10-08 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

ரகசிய தகவல்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் இருந்து வெளியூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து உளுந்தூர்பேட்டை போலீசார் ஆதனூர் கிராமத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை வழிமறித்தனர். அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் ஒரு மூட்டையை பிரித்து பார்த்தபோது உள்ளே ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். தலா 50 கிலோ வீதம் மொத்தம் 50 மூட்டைகளில் 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

டிரைவர் கைது

இதையடுத்து மினி லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் வேல்முருகன்(வயது 21) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார் மினி லாரியுடன் 2½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் உளுந்தூர்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்