ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2023-04-07 09:36 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா கிராமம் வழியாக ஆந்திராவை நோக்கி சரக்கு வேன் ஒன்று தினமும் சந்தேகத்திற்கு இடமாக சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக சிவாடா கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சிவாடா கிராம வழியாக ஆந்திரா எல்லையை நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை அந்த பகுதி மக்கள் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். பொதுமக்களை கண்டதும் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் சரக்கு வேனை சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து வருவாய் மற்றும் போலீஸ் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சரக்கு வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி 2 டன் என கூறப்படுகிறது. பின்னர் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுக்குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவில் அதிக விலைக்கு விற்க கடத்திச் செல்வது தொடர்கதையாக உள்ளது. சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திராவுக்கு சென்றால் சோதனை சாவடியில் போலீசிடம் சிக்காமல் ரேஷன் அரிசியை கடத்த சிவாடா வழியை கடத்தல்காரர்கள் பயன்படுத்துகின்றனர். ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க தமிழக எல்லையை ஒட்டி உள்ள கிராமங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்