மாவு அரைக்க கொண்டு வந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடியில் மாவு அரைக்க கொண்டு வந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாவு அரைக்கும் ஆலை இயங்கி வருகிறது. இதில் அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கொண்டு வந்து அரைப்பதாக ரகசிய தகவல் வட்ட வழங்கல் அதிகாரி கண்ணனுக்கு கிடைத்தது.
அதன் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மாவு அரைக்கும் ஆலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் 30 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி அரைக்க வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல்
இதனைத் தொடர்ந்து 30 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அரிசியை அரைக்க கொண்டு வந்தது யார், எங்கிருந்து இவ்வளவு ரேஷன் அரிசி வந்தது என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.