தஞ்சையில் வாழை இலை விலை 2 மடங்கு உயர்வு

தஞ்சையில் வாழை இலை விலை 2 மடங்கு உயர்வு

Update: 2023-01-27 20:25 GMT

முகூர்த்த நாட்கள் என்பதால் தஞ்சையில் வாழை இலைகள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. நுனி இலை ஒன்று ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாழை சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த பகுதிகளில் வாழை இலை மற்றும் வாழை நார் பொருட்கள் தயாரிப்பின் மூலம் ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.தஞ்சையை சுற்றியுள்ள திருவையாறு, அம்மன்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைகள் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நுனி, ஏடு இலை

இப்படி அனுப்பி வைக்கப்படும் இலைகளில் 2 வகைகள் உள்ளன. நுனி இலை, ஏடு என 2 வகைகளாக ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வாழை... வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும் என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அதாவது வாழை பயிரிட்டு அது நன்றாக விளைந்து அறுவடை செய்து நல்ல விலைக்கு விற்றால் வாழை பயிரிட்டவிவசாயிகளின் வாழ்க்கை வளம் பெறும். அதே நேரத்தில் வாழை பயிர் நன்றாக விளைந்து அறுவடைக்கு வரும் நேரத்தில் சூறாவளிக்காற்று, புயல் போன்ற சீற்றங்கள் காரணமாக சாய்ந்து போனால் அது விவசாயம் செய்த விவசாயியின் வாழ்வை தாழ வைக்கும் என்பதற்காக இந்த சொல் வழக்கு சொல்லப்படுவது உண்டு.

விருந்து, விழாக்கள், திருமணம், சுக-துக்க நிகழ்வுகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இது மரியாதையின் வெளிப்பாடாகவும், சுகாதாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. இன்றும் அனேக ஓட்டல்களில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இலையில் வைத்து கட்டி தரப்படும் உணவுகளுக்கு மவுசு அதிகம். கால்நடைகளுக்கு உணவாக... நாம் வளர்க்கும் ஆடு, மாடு உள்பட கால்நடைகள் வாழை இலையை உணவாக உண்டு பசியாறும். எஞ்சியவற்றை பூமி எளிதாக மக்கச்செய்துவிடும். கால மாற்றத்தால் வாழை இலைகள் பயன்பாடு குறைந்து பிளாஸ்டிக் தட்டு, பேப்பர் இலை போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

2 மடங்கு விலை உயர்வு

இருந்தாலும் பிளாஸ்டிக் தட்டுகளின் தீமையை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். அதனால் வாழை இலை மற்றும் வாழை மட்டையால் செய்யப்படும் தட்டுகள், கிண்ணங்களின் பயன்பாடு பெருகி வருகிறது. இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது. விலை உயர்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு நுனி இலை ரூ.2 முதல் ரூ.3க்கும், ஏடு இலை ரூ.1 முதல் ரூ.2-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது தை மாத முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் இலைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. தஞ்சை மாநகர பகுதிகளில் நுனி இலை ரூ.6-க்கும், ஏடு இலை ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நுனி இலை ரூ.7-க்கும், ஏடு இலை ரூ.6-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழை இலை விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதோடு, தட்டுப்பாடும் காணப்படுகிறது.

விவசாயிகளும் மகிழ்ச்சி

இது குறித்து வாழை இலை வியாபாரிகள் கூறுகையில், "முகூர்த்த நாள் காரணமாக வாழை இலையின் விலை அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைத்து வருகிறது. இதை மாதத்தில் இன்னும் பல்வேறு முகூர்த்த நாட்கள் இருப்பதால் வாழை இலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது"என்றனர்

Tags:    

மேலும் செய்திகள்