மாணவர்கள் மோதலுக்கு காரணமான 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
புதுப்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதலுக்கு காரணமாக இருந்த 2 ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் பிளஸ்-2 மாணவர்களில் இருபிரிவாக பிரிந்து, கல்வீசி தாக்கி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா உத்தரவின் பேரில், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், மாணவர்களின் மோதலுக்கு பின்னணியாக அந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் புவியியல் ஆசிரியர் வீரவேல், வரலாறு ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. அதாவது இவர்கள் இரு சமுதாய மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதும் விசாரணையில் வெளியானது. இதை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பணியிடை நீக்கம்
பின்னர் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் புதுப்பேட்டை அரசு பள்ளிக்கு நேரில் வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மோதலுக்கு ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர்கள் வீரவேல், சீனிவாசன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.