குவைத், சவுதியில் 2 தமிழர்கள் உயிரிழப்பு: உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

குவைத், சவுதியில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-09-14 09:53 GMT

சென்னை,

குவைத் மற்றும் சவுதியில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புரவியான் ஆகியோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இந்தியத் தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர், வேலைக்குச் சென்ற சில தினங்களிலேயே குவைத் நாட்டில், சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

இதேபோல திருச்சி வடக்கு சித்தாம்பூர், காவேரிபாளையத்தைச் சேர்ந்த சின்னமுத்து புரவியான் என்பவர் சவுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த துயர நிகழ்வுகள் குறித்து வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சரோ, தமிழக அரசோ இதுவரை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புரவியான் ஆகியோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இந்தியத் தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, முதலமைச்சர் இதில் நேரடியாக தலையிட்டு குவைத் மற்றும் சவுதியிலிருந்து இருவரின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கும், அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இத்தகைய துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாதபடி தடுப்பதற்கு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையின் சார்பில் உரிய நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்