வாலிபர் கொலையில் தேடப்பட்ட 2 பேர் கோர்ட்டில் சரண்
நெல்லை அருகே வாலிபர் கொலையில் தேடப்பட்டு வந்த 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
நெல்லை அருகே வாலிபர் கொலையில் தேடப்பட்டு வந்த 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
வாலிபர் கொலை
நெல்லை அருகே தச்சநல்லூர் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 28). இவரை மர்ம கும்பல் கடந்த 13.2.2021 அன்று கொலை செய்து உடலை மானூர் அருகே உள்ள நரியூத்து பகுதியில் வீசி சென்றது. இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் நெல்லை தாழையூத்து ராஜவல்லிபுரம் இந்திரா காலனியை சேர்ந்த முத்து மகன் மோகன் என்ற மோகன்தாஸ் (வயது 49), சிவகங்கை மாவட்டம் கன்னமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில்குமார் (34) ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.
2 பேர் கோர்ட்டில் சரண்
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், குற்ற வழக்குகளில் கைது செய்யப்படாதவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார், அஜித் கொலை வழக்கில் தொடர்புடைய மோகன், செந்தில்குமார் ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நெல்லை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களுக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.