அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் பிளஸ்-2 தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு

பிளஸ்-2 தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 சதவீதம் இடம் வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Update: 2022-06-27 22:58 GMT

சென்னை,

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற திட்டத்தை உருவாக்கி, கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தடைபட கூடாது என்றும், அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 2-ம் ஆண்டு சேர்க்கை கிடையாது என்று முன்பு செய்திகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து நான், பாலிடெக்னிக் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

'வொக்கேசனல்' மாணவர்கள்

தற்போது, பிளஸ்-2 வகுப்பில் தொழிற்கல்வி படிப்பை (வொக்கேசனல்) முடித்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் சேர வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இது நீண்டகாலமாக நீடித்து வரும் ஒன்றாகும்.

தொழில் கல்வி படிப்பில் கணிதம் படித்திருந்தால் என்ஜினீயரிங்கில் சேர முடியும். தொழில் கல்வி படிப்பை முடித்த மாணவர்கள், 6 விதமான என்ஜினீயரிங் கல்வியில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் இருந்து, அண்ணா பல்கலைக்கழகம், அதன் 16 உறுப்புக்கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் பிளஸ்-2 வகுப்பில் தொழில் கல்வி படிப்பு முடித்த 2 சதவீத மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

முன்பு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4 சதவீதம் தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இனி அனைத்து கல்லூரிகளிலும் அந்த மாணவர்களுக்கு 2 சதவீதம் இடம் அளிக்கப்படும்.

4 சதவீதம் இடம் அளித்திருந்தபோதும் மாணவர்கள் அதிகம் பேர் சேரவில்லை. தற்போது எல்லா மாணவர்களுமே சேர வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

6 வகை பிரிவு என்ஜினீயரிங் கல்வியில் சேர அவர்களுக்கு தகுதி உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகியவற்றில் அவர்கள் சேரலாம். தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் 2 ஆயிரம் மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ரூ.1,000 வழங்கும் திட்டம்

அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள், உயர் கல்வியில் படிக்க மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பலருக்கு தெரிந்திருக்கிறது. அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. முதல் நாளிலேயே 15 ஆயிரம் விண்ணப்பங்கள் (2-ம், 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள்) வந்துள்ளன.

இதுகுறித்த தரவுகளை எடுத்துகொண்டிருக்கிறோம். இந்த திட்டத்தை ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் தொடக்கி வைப்பார்.

என்ஜினீயரிங் விண்ணப்பம்

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வந்த பிறகு என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும். 2-ம், 3-ம் ஆண்டு மாணவர்களுக்காக அனைத்து அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் ஜூலை 18-ந்தேதி தொடங்கும். கல்லூரி கனவு திட்டத்தை ஜூலை 1-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் அந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 902 ஆக உள்ளது. எனவே கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என்று நம்புகிறோம்.

பக்ரீத் பண்டிகை

பக்ரீத் பண்டிகையன்று ஜூலை 10-ந்தேதி விடுப்பு அளிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத் அமைப்பினர் அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

அதில், ஜூலை 11-ந்தேதி பக்ரீத் பண்டிகை வரக்கூடும். ஆனால் அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 பாடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அவர்கள் கூறியபடி ஜூலை 11-ந்தேதி பக்ரீத் பண்டிகை வரும் என்றால், அன்று நடக்கும் தேர்வுகள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்