ரேஷன் கடை பணியாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்

ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் செய்வதில் முறைகேடு செய்த 2 பணியாளர்களை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2023-02-15 19:00 GMT

தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அந்த கடையில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை தரையில் கொட்டி, குவித்து வைத்து மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அதை பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். விற்பனையாளர்களை அவர் கண்டித்தார். மேலும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட பொருட்களின் எடை அளவை கலெக்டர் சரிபார்த்தார். அப்போது எடை குறைவாக பொருட்கள் வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விவரங்களை முழுமையாக தணிக்கை செய்து அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தலைமையில் அதிகாரிகள் அந்த ரேஷன் கடைக்கு சென்று பொருட்களின் இருப்பு விவரங்களை தணிக்கை செய்தனர்.

அப்போது அந்த கடையில் 10 ஆயிரத்து 237 கிலோ புழுங்கல் அரிசி, 525 கிலோ பச்சரிசி, 345.5 கிலோ சர்க்கரை ஆகியவை இருப்பு குறைவாக இருந்தது. இது தொடர்பாக இணைப்பதிவாளர் தணிக்கை அறிக்கையை கலெக்டருக்கு நேற்று சமர்ப்பித்தார். இதையடுத்து அந்த ரேஷன் கடையின் விற்பனையாளர் சுப்பிரமணி, கட்டுனர் ஈஸ்வரன் ஆகிய இருவரையும் பணி இடை நீக்கம் செய்து கலெக்டர் ஷஜீவனா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்