2 புரோகிதர்கள் படுகாயம்
வேடசந்தூர் அருகே பஸ் மீது மோட்டார் சைக்கில் மோதிய விபத்தில் 2 புரோகிதர்கள் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர்கள் பாஸ்கரன் (வயது 31), பிரகாஷ் (32). புரோகிதர்களான இவர்கள், மோட்டார் சைக்கிளில் கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாஸ்கரன் ஓட்டினார். பிரகாஷ் பின்னால் அமர்ந்து இருந்தார்.
வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற தனியார் பஸ் ஆட்களை ஏற்றுவதற்காக பஸ் நிறுத்தம் அருகே நின்றது. இதனை பாஸ்கரன் கவனிக்காததால், பஸ்சின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன், பிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----