லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டில்கள் கடத்தியவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-04 18:45 GMT

திருவாரூர்:

கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டில்கள் கடத்தியவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மதுபாட்டில்கள் கடத்தல்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே களப்பால் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவர், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளார். கடந்த மாதம் 27-ந்தேதி இவர் டாஸ்மாக் கடையில் 75 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார்.

அப்போது களப்பால் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருக்களார் போலீஸ் ஏட்டு கலையரசன், ேபாலீஸ்காரர் விஷ்ணு ஆகியோர் மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

இதில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர். ராஜதுரையை கைது செய்யாமல் இருக்க அவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

அதன்பேரில் போலீஸ் ஏட்டு கலையரசன் மற்றும் போலீஸ்காரர் விஷ்ணு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இருவரும் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு கலையரசன், போலீஸ்காரர் விஷ்ணு ஆகிய 2 போலீஸ்காரர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்