திருப்பூரில் மது குடிக்க பணம் கொடுக்காததால் வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
வடமாநில தொழிலாளி
பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்தவர் சுபேத்தாகூர் (வயது 35). இவர் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் தங்கியிருந்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். கடந்த 13-10-2021 அன்று இரவு சுபேத்தாகூர் திருப்பூர் ஆலங்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆலங்காடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (27), அவருடைய நண்பர் முகமது அரிஷ் (26) ஆகியோர் அங்கு வழிப்பறி செய்யும் நோக்கத்தில் நின்றுள்ளனர். சுபேத்தாகூரை பார்த்து 2 பேரும், 'மது குடிக்க பணம் வேண்டும் மரியாதையாக பணம் கொடுத்துவிட்டு போ' என்று மிரட்டியுள்ளனர். ஆனால் சுபேத்தாகூர் பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.
கத்தியால் குத்திக்கொலை
இதனால் கோபமடைந்த 2 பேரும் சேர்ந்து கத்தியால் சுபேத்தாகூரை வயிறு மற்றும் நெஞ்சில் சரமாரியாக குத்திவிட்டு அவரிடம் இருந்து ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பினார்கள். அவர் சத்தம்போட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஸ்வநாதன், முகமது அரிஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 25-10-2021 அன்று சுபேத்தாகூர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதன்பிறகு கொலை வழக்காக மாற்றம் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம், பணத்தை கொள்ளையடித்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், இதை ஏக காலத்தில் விஸ்வநாதன், முகமது அரிஷ் ஆகியோர் அனுபவிக்க நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.