2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை

ரெயில்வே ஊழியரை தாக்கிய 2 பேருக்கு தலா 7 ஆண்டுகுள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-03-31 18:45 GMT

ரெயில்வே ஊழியரை தாக்கிய 2 பேருக்கு தலா 7 ஆண்டுகுள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவிட்டது.

ரெயில்வே ஊழியர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆயங்குடிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 38). ெரயில்வே ஊழியரான இவர் கடந்த 1.2.2019 அன்று கொள்ளிடம் அருகே கண்ணங்குடி சாலையின் குறுக்கே உள்ள ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியில் இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த கொள்ளிடம் கேசவ நகரைச் சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (23), கொள்ளிடம் தோப்புத்தெருவை சேர்ந்த தங்கமணி மகன் தமிழ்ச்செல்வன் (28) ஆகிய 2 பேரும் ரெயில்வே கேட்டை திறக்க வேண்டும் என கூறி முத்துசாமியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளனர்.

வாக்கி டாக்கி உடைப்பு

மேலும் அங்கிருந்த ரெயில்வே தொலைபேசியை உடைத்ததோடு, முத்துசாமியின் கையில் வைத்திருந்த வாக்கிடாக்கியையும் பறித்து அடித்து உடைத்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ நேற்று தீர்ப்பு அளித்தார்.

2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

அந்த தீர்ப்பில் பிரகாஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து பிரகாசையும், தமிழ்ச்செல்வனையும் ரெயில்வே போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்