மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-25 20:29 GMT

மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 54). ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான இவர் தற்போது பகுதி செயலாளராகவும், கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் மற்றும் கார் நிறுத்துமிடம் ஒரு பிளாட்டிலும், மற்றொரு பிளாட்டில் அவரும் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களில் தீயை பற்ற வைத்து கிருஷ்ணன் அலுவலகம் மற்றும் கார் நிறுத்தும் இடத்தில் வீசி விட்டு தப்பிவிட்டனர். அப்போது அங்கிருந்த காவலாளி அங்கு பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். மேலும் தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசபெருமாள், ஜெய்ஹிந்த்புரம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி கிருஷ்ணன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக அவர் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் டவர் மூலம் தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த உசேன் மற்றும் நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபோல் கடந்த 22-ந் தேதி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையை முடித்துவிட்டு அவர்கள் வெளியே வந்த போது அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காவலர் துரைமுருகன் என்பவரை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலூரை சேர்ந்த சேக் அலாவுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்