வழக்கை வாபஸ் பெறுமாறு சிறுமியின் தந்தையை மிரட்டிய 2 பேருக்கு வலைவீச்சு

வழக்கை வாபஸ் பெறுமாறு சிறுமியின் தந்தையை மிரட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-15 19:14 GMT


விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவள் மாயமாகி விட்டாள். இதுகுறித்து சிறுமியின் தந்தை வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழரசன் (வயது 20) என்பவர் திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதன் பேரில் தமிழரசனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். தமிழரசன் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் சாட்சி சொல்வதற்காக தொடர்புடைய சிறுமியை அவளது தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தார். அப்போது தமிழரசன், தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து சிறுமியின் கிராமத்திற்கு சென்று அவளது தந்தையிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டியதோடு தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஊரில் உள்ளவர்கள் கண்டித்ததால் அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதுபற்றி சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் தமிழரசன் மற்றும் அவரது நண்பர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்