நாகூர் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரிலும் சாராய விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாகூரை அடுத்த கொட்டாரக்குடி பகுதிகளில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொட்டாரகுடி மேலத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விஜயகாந்த் (வயது30) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்தை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கைது
இதேபோல் சின்னமங்களம் பகுதியில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைத்தெருவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சின்னமங்களம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சங்கர் (48) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.