கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-08-31 20:18 GMT

சேலம், 

கஞ்சா விற்பனை

சேலம் அருகே வீராணம் சின்னனூர் துளசிமணியூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர், கடந்த மாதம் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து சென்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. ஓசூரில் இருந்து வாங்கி வந்து இவர் சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதேபோல், துளசிமணியூரை சேர்ந்த நடராஜ் என்பவர், அவரது வீட்டிற்கு அருகில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தபோது போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர், பெங்களூருவுக்கு பஸ்சில் சென்று அங்கிருந்து ஒருவரிடம் கஞ்சாவை வாங்கி வந்து அதை சேலத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது.

குண்டர் சட்டத்தில் கைது

சதீஷ்குமார், நடராஜ் ஆகிய இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு வீராணம் போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், கஞ்சா வியாபாரிகளான அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் நஜ்முல்ஹோடா நேற்று உத்தரவிட்டார்.

சேலம் மாநகரில் ரவுடிகள் 51 பேர், தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் 37 பேர், குட்கா வியாபாரிகள் 6 பேர், கஞ்சா விற்பனை செய்தவர்கள் 6 பேர், லாட்டரி வியாபாரிகள் 2 பேர், விபசார தொழிலில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் 6 பேர் என மொத்தம் இந்த ஆண்டில் இதுவரை 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்