டீக்கடைக்காரர் உள்பட 2 பேர் காயம்
அய்யலூர் அருகே, கார்கள் மோதிய விபத்தில் டீக்கடைக்காரர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அய்யலூர் அருகே உள்ள ஒண்டிபொம்மன்பட்டியை சேர்ந்தவர் கணபதி (வயது 39). இவர், அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை கணபதி, பாச்சாநாயக்கனூரை சேர்ந்த தனது நண்பர் முருகேசன் என்பவருடன் காய்கறி வாங்குவதற்காக ஒரு காரில் திண்டுக்கல் நோக்கி சென்றார்.
திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அய்யலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த கார், கணபதி சென்ற கார் மீது மோதியது. இதில் கணபதி சென்ற கார் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் கணபதி, முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணப்பிரியன் (23) மீது, வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரியவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.