பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி நர்சு உள்பட 2 பேர் பலி

பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி நர்சு உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-06-09 17:01 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி நர்சு உள்பட 2 பேர் பலியானார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூரை சேர்ந்தவர் மாறன். இவரது மகன் தமிழரசன் (வயது 22). தொழிலாளி. கடத்தூர் அருகே உள்ள சில்லாரஅள்ளியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கவிநிலா (18). இவர் நர்சிங் படித்து உள்ளார். தமிழரசனும், கவிநிலாவும் நேற்று பொம்மிடியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி ஒட்டுபள்ளம் முனியப்பன் கோவில் எதிரே செம்பியானூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை தமிழரசன் திருப்பி உள்ளார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேரும் சாவு

இந்த விபத்தில் தமிழரசன், கவிநிலா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் கவிநிலாவை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கவிநிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்