தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள்கள் உரசியதில் தூக்கி வீசப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் மீது டெம்போ மோதியதால் பலியானார்கள்.
திங்கள்சந்தை:
வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள்கள் உரசியதில் தூக்கி வீசப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் மீது டெம்போ மோதியதால் பலியானார்கள்.
கிரகப்பிரவேசம்
குமரி மாவட்டம் சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் ராபி. இவருடைய மகன் ஜோசப் ஆல்வின் (வயது 23). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
ஆல்வின் சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்காக கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடத்த ஆல்வின் முடிவு செய்து ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் ஆல்வினுடன் பெங்களூருவில் பணிபுரியும் நண்பர் ஒருவர் ெரயிலில் நாகர்கோவில் வந்தார். அவரை அழைத்து வர ஜோசப் ஆல்வின் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் ராகுல் (23) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன் தினம் இரவு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.
இவர்களுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் விபின் (26), சேவியர் ஜெனிஸ் (23) ஆகிய 2 பேரும் வந்தனர். இரவு 11 மணி அளவில் வில்லுக்குறி பாலத்தை தாண்டி அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தனர்.
2 வாலிபர்கள் விபத்தில் பலி
அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் ஒன்ே்றாடொன்று உரசிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ஜோசப் ஆல்வின், ராகுல் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதற்கிடையே எதிரே வந்த டெம்போ ஒன்று சாலையில் கிடந்த 2 பேர் மீது ஏறியபடி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் ஜோசப் ஆல்வின், ராகுல் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
அதே சமயத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் கீழே விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.
சோகம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 2 பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த விபின், சேவியர் ஜெனிசுக்கு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் நண்பருடன் வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.