நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண்
சென்னையில் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் 2 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.;
சென்னை வடபழனி மன்னாா் முதலி தெருவில் வசிக்கும் சரவணன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்துக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் தீபக் உள்பட 2 பேரை கத்திமுனையில் கட்டிபோட்டுவிட்டு ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக சையது ரியாஸ் (22) என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
அதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்து வேலை இல்லாத பட்டதாரி நண்பர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை பெரியார் நகர், ஆழ்வார் திருநகர் அண்ணா சாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 21), அவரது நண்பரான கிஷோர் கண்ணன் (23) ஆகிய இருவரும் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதி சத்யநாராயணன் உத்தரவின்படி இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.