வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

சாத்தூர், ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

Update: 2022-12-05 19:12 GMT

சாத்தூர், 

சாத்தூர், ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

தொழிலாளி பலி

எட்டயபுரம் தாலுகா செங்கோட்டையை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50). இவர் சாத்தூர் பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் கோவில்பட்டி சாத்தூர் நான்கு வழிச்சாலையில் சடையம்பட்டி அருகே சர்வீஸ் சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது.

இதில் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த அய்யப்பன் (55) என்பவரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (21). இவர் பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் ஏழாயிரம் பண்ணை பட்டாசு ஆலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அப்போது புல்லக்கவுண்டன்பட்டி இந்திரா காலனி அருகே உள்ள வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்ததில் அவர் காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அருண்குமார் இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை வேலாண்டி அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்