வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
நெல்லையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
நெல்லை டவுன் மவுண்ட் ரோடு டி.எம்.சி. காலனி தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 73). இவர் நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் நெல்லை டவுனில் இருந்து தனியார் பஸ்சில் ஏறி சந்திப்பு பகுதிக்கு வந்து ெகாண்டிருந்தார். தாலுகா அலுவலகம் எதிரே வந்தபோது டிரைவர் பஸ்சை திடீரென நிறுத்தினாராம். இதனால் நிலைதடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்த சண்முகம் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் நெல்லை டவுன் மேலரதவீதியை சேர்ந்த அழகப்பன் (84) நெல்லை என்.ஜி.ஓ. காலனி மெயின் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அழகப்பன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.