மரத்தில் இருந்து தவறி விழுந்து 2 பேர் சாவு

வெவ்வேறு சம்பவங்களில் மரத்தில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Update: 2023-09-10 18:49 GMT

குலசேகரம்:

வெவ்வேறு சம்பவங்களில் மரத்தில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தொழிலாளி

குலசேகரம் அருகே உள்ள விலவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது39). தென்னை மற்றும் பாக்குமரம் ஏறும் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டின் அருகில் உள்ள ஒருவரின் தோட்டத்தில் பாக்கு பறிப்பதற்காக மரத்தில் ஏறினார்.

பின்னர் பாக்கு பறித்து விட்டு இறங்கிய போது திடீரென மரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குமாரின் அண்ணன் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பண்டாரவிளையை சேர்ந்தவர் செல்லத்துரை (65). இவர் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் குளிக்க செல்வதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி ஜாய்ஸ் லீலா (60) அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலையில் மணப்படிஞ்சிவிளை பகுதியில் செல்லத்துரை இறந்து கிடப்பதாக ஜாய்ஸ் லீலாவுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு உறவினர்கள் சென்று பார்த்தபோது தென்னை மரத்தின் கீழ் செல்லத்துரை இறந்த நிலையில் கிடந்தார். அருகில் இளநீர்குலையும், அரிவாளும் கிடந்தது. மரத்தில் இளநீர் பறித்தபோது தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்லத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்